Saturday, 25 July 2015

சுத்தியில்லையேல் சித்தியில்லை ..

அன்புடையீர்,
         அனைவருக்கும் இனிய வணக்கம். சித்த மருந்துகளை சுத்தி என்னும் தூய்மைப்படுத்தும் முறை பற்றி அறிந்துகொள்வோம்.

சுத்தி
         சுத்தி என்பது தூய்மைப்படுத்துதல் அல்லது பொருள்களில் இயற்கையாகவும், செயற்கையாகவும் தங்கியிருக்கின்ற மாசுகளை நீக்குதல், குற்றம் களைதல் என்பதாகும். 
 
      மூலிகை, மருந்துப் பொருள், உலோகம், பாஷாணம், இரச வகை ஆகிய அனைத்தையும் சுத்தி செய்த பின்பே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்பது, சித்த மருத்துவ நெறிகளுள் ஒன்றாகும்.
 
       சுத்தி செய்யப்படாமல் செய்யப்படுகின்ற மருந்தினால் முழுமையான மருத்துவக் குணமில்லாமல் போவதுடன், தீமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதால், சுத்தி முறைகள் வலியுறுத்தப் படுகின்றன.

மருந்துப் பொருள்களிடத்திலே தங்கியுள்ள மாசுகளை நீக்கி ஆண், பெண் ஆகிய இரு பாலார்க்கும் ஏற்றவாறு வகுத்துரைக்கப் பட்டதே சுத்திமுறையின் சிறப்புத் தன்மையாகும் என்று, தேரையர் கூறக் காணலாம்.
இஞ்சிக்கு மேல் தோலும், கடுக்காய்க்குக் கொட்டையும் மரங்களுக்குச் செதிலும் நஞ்சு என்பர். மருந்துக்குப் பயன்படுத்து முன், அந்நஞ்சு நீக்கப்பட்டால் சுத்தியாகும். குண்டுமணி, அலரிவிதை ஆகியவற்றை உண்டால் மரணத்தை உடனே ஏற்படுத்தும். ஆனால், மருந்துகளில் அவை அரிய பணியைச் செய்கின்றன. அவற்றைக் கொண்டு செய்யப்படுகின்ற மருந்தை உண்பவர் மரணமடைவதில்லை. காரணம், சுத்தி செய்த பின்னர் மருந்தாகச் செய்யப்படுவதால்தான்.
 
      பாஷாணங்கள் எல்லாம் உயிரைக் கொல்லும். ஆனால், சுத்தி செய்யப்பட்ட பிறகு அவை மருந்தாகப் பயன்படுகின்றன.
 
சுத்திப் பொருள்கள்
        உலோகங்கள், பாஷாணங்கள், நச்சுத்தன்மையுடைய கொட்டை, பருப்பு, விதை போன்ற பொருள்களைச் சுத்தி செய்வதற்காக,  
 
 மூலிகைச் சாறு, கள், நீர், பால், மோர், பூநீர், இளநீர், சிறுநீர், சுண்ணாம்பு நீர், காடி நீர், எண்ணெய், பழநீர், செம்மண், செங்கல்தூள் போன்ற பல பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன.
 
ஒரு பொருளால் எல்லாவித மருந்துகளையும் சுத்தி செய்ய முடியாது. 
 
     பொருள்களின் குணமும், சுத்திக்காகப் பயன்படுத்தப் படுகின்ற பொருள்களின் குணமும் கண்டறிந்து, அவற்றின் சேர்க்கை யால் உண்டாகும் எதிர் விளைவுகளையும் கண்டறிந்தே சுத்தி செய்யப் படும். 
 
         மருந்துகளைச் சுத்தி செய்யும் முறை விரிவாகவும் விளக்க மாகவும் சித்தர்கள் கலைக் களஞ்சியத்தில் விளக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment