Saturday, 25 July 2015

நமது உடைகளும் உடல் நலமும்....

அன்புடையீர்,

          அனைவருக்கும் இனிய வணக்கம்.நாம் அணியும் உடைகளாலும் நமது உடல் நலன் மாறுபடும்.அதுபற்றி அறிந்துகொள்வோம்.


ஆடைகளும் உடல் நலமும்
      ஆடைகள் பலவகை. அவை கொண்டிருக்கும் வண்ணங்களும் பல என, ஆடைகள் வளர்ந்து வந்துள்ளன. பெரும்பாலும் ஆடை என்பது உடலை மறைக்கவும், மதிப்பு மரியாதைக்காகவுமே என்று கருதப்பட்டு வருகிறது. ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பது பழமொழி யாகவும் இருந்து வருகிறது. ஆடை இருந்தால் தான் மனிதன் மதிக்கப்படுகிறான் என்பது அறியப் பட்டாலும், ஆடை உடல் நலனைப் பாதிப்படையச் செய்பவையாக இருக்கிறதென்கிறது, சித்த மருத்துவம்.
 
ஆடைவகைகள்:
 
சால்வை : 
     சலதோஷம், தலைவலி, வாத நோய், வயிற்றுவலி, குளிர்பனி போகும்.
 
பட்டாடை : 
     பித்தம், கபம் போகும். மகிழ்ச்சி, உத்தி, வியர்வை, காந்தி உண்டாகும்.
 
வெண்பட்டு : 
     சுரம், சீதம், வாதம் போகும். காந்தி, அழகு உண்டாகும்.
 
நாருமடி : 
       சளி, நீர் ஏற்றம், வாய்வு, சந்தி போகும். உடல் சுத்தி உண்டாகும்.
 
வெள்ளாடை :
      முக்குற்றம், வியர்வை போகும். ஆயுசு, அழகு, களிப்பு, போதம், வெற்றி உண்டாகும்.
 
சிவப்பாடை : 
     பித்தம், வெப்பம், சுரம், வாந்தி, அருசி, கபம், மந்தம் உண்டாகும்.
 
பச்சை ஆடை : 
     உடல்வெப்பம், ஐயம் போகும், கண்குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உண்டாகும்.
 
கறுப்பாடை :
     காசம், வெப்பு, விஷம், மந்தாக்கினி, பித்தம் போகும்.
 
மஞ்சளாடை :
     நீர்க்கடுப்பு, காசம், விஷ சுரம், நமைச்சல், வெப்பு, மலம் போகும்.
 
கம்பளம் :
      பெரும்பாடு, அசீரணம், கிராணி, சூலை, பேதி, சீழ் போகும்.
 
அழுக்குத்துணி :           அழகு, அறிவு, போகும்; நோய், குளிர், துக்கம், தினவு, வெட்கம் உண்டாகும்.
என்று குறிப்பிடுகிறது. 
 
 ஆடை வகைகள் எல்லாம் ஒவ்வொரு குணத்தை உடையவையாக இருக்கக் காணலாம்.
 
      இவற்றில் சிவப்பு ஆடையும், அழுக்குத் துணியும் உடலுக்குப் பயன் தராதவைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 
 கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்னும் பழமொழி, அழுக்குத் துணியினால் வரக் கூடிய கெடுதல்களைக் கருதி உரைக்கப்பட்டதாகக் கொள்ளவும் இடமுண்டு. ஆக, ஆடை வகைகள் உடல் நலன் கருதியே பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிகிறோம்.

No comments:

Post a Comment