Saturday, 25 July 2015

பத்தியம் இருப்பதால் ஏற்படும் பயன்கள்..

அன்புடையீர்,
                அனைவருக்கும் இனிய வணக்கம். பத்தியத்தின் பயன்களை காண்போம்.

பத்தியம்
         பத்தியம் என்பது நன்மை செய்யும் ஒன்று  எனவும், நோயாளிக்கு இசைந்த உணவு என்றும் பொருளுரைக்கப்படுகிறது.
நோய்வாய்ப்பட்ட நோயாளிக்கு வந்துற்ற நோயின் வீரியத்தை அதிகப்படுத்துகின்ற உணவை உண்டால் நோய் தீவிரமடையும். அதனால், விலக்க வேண்டிய பொருள்களை விலக்கிவிட வேண்டும். நோய்க்கு ஆதரவாக இல்லாமல், நோயாளியின் உடல் நலத்துக்கு ஆதரவாக அமையும் பொருள்களைப் பத்தியப் பொருள் என்றும், அதனைக் கடைப்பிடித்து வருவதற்குப் பெயர் பத்தியம் என்றும் கூறுவர். பத்தியம் என்பதை ஒழுங்கு, ஒழுக்கம் என்னும் கருத்துடைய சொல்லாகக் கொள்ளலாம்.நோயாளிக்கு கொடுக்கப்படும் மருந்துக்கு எதிர்ப்பாக இருப்பவை கொழுப்புச்சத்தும் உடல் நல இழப்பும் ஆகும்.இவற்றை சரிசெய்ய பத்தியம் உதவி செய்கிறது.
 

நோயாளி மருந்துகளை உண்ணும் போது, மருந்தின் வீரியம் உடலுக்குள் சென்றடைய சில பொருள்கள் தடையாக இருக்கின்றன. மருந்தின் தன்மையை மாற்றக் கூடிய அல்லது நோயாளிக்கு எதிர்வினைகளை உண்டாக்கக் கூடிய உணவுகள் உண்ணப்படாமல் தடுக்கப்படுவதும் பத்தியமாம்.
 
பத்தியத்தின் தேவை
        நோய் வந்த போதும், நோய்க்கான மருந்துண்ணும் போதும் ஒதுக்கப்பட வேண்டிய பத்தியப் பொருள் ஒதுக்கப் படாவிட்டால் நோய் குணமாகாது என்பது சித்த மருத்துவக் கொள்கையாகக் கூறப் படுகிறது.

      நோயைக் குணப்படுத்திக் கொள்ள தேவைப்படுகின்ற மருத்துவத் தின் அங்கமாகவே பத்தியமும் கருதப்படுகிறது.
 
பத்தியத்தின் பயன்
           பத்தியத்தினால் நோய்க்காக உண்ணப்படும் மருந்து நோயைப் போக்கக் கூடிய பலனைத் தருவதாக அமையும். பத்தியம் தவறிவிட்டால், நோய் தீர்க்கும் பணியிலிருந்து மருந்தும் தவறிவிடும். நோயைத் தீர்க்கும் மருந்துவப் பணியைச் செய்கின்ற மருத்துவனுக்கு, அவன் தருகின்ற மருந்தை விடவும், அவன் கூறுகின்ற பத்தியமே அவனின் மருத்துவ வெற்றிக்குக் காரணமாக அமையும். பத்தியமுறை மருத்துவமே சித்த மருத்துவத்தின் நுண்ணறிவுக்கு எடுத்துக் காட்டாகும்.பத்தியம், மருந்துவம் சார்ந்த முறை என்பதுடன், மருந்தினும் சிறந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment